போளூரில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருடிய வாலிபர் சிக்கினார்; சுவர் ஏறி குதித்தபோது காலில் படுகாயம்

போளூரில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருடிய வாலிபர் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்தபோது காலில் படுகாயம் அடைந்து சிக்கி கொண்டார்.

Update: 2019-09-10 22:45 GMT
போளூர்,

போளூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவசாம்பு. இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இந்த பகுதியில் தற்போது தான் ஆங்காங்கே வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. சிவசாம்பு தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் திருவண்ணாமலையில் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் போளூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டிற்குள் ஆள்நடமாட்டம் இருப்பதை அறிந்த அவர் உடனே திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

மக்கள் வருவதை பார்த்த வீட்டில் இருந்த நபர் தப்பி செல்ல அவசர, அவசரமாக மேல்மாடிக்கு சென்று அங்கிருந்து ஜன்னல் வழியாக குதித்து காம்பவுண்டு சுவர் ஏறி வெளியே செல்ல குதித்தார். இதில் அவருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது.

இதனால் அவரால் வேகமாக ஓட முடியவில்லை. பொதுமக்கள் அந்த நபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். இதற்கிடையில் சிவசாம்பு வீட்டிற்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது அந்த நபர் பீரோவில் இருந்த நகைகளை எடுத்து ஒரு கைப்பையில் போட்டு வீட்டின் முன் பக்கம் வைத்து விட்டும், டி.வி.யை கழற்றி வெளிப்புறமாக வைத்து விட்டும் சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடியை வீட்டினுள் அவர் சென்ற இடமெல்லாம் வடிவேல் திரைப்பட பாணியில் தூவி இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த போளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் அவர், காளசமுத்திரத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சதீஷ் (வயது 30) என்பது தெரியவந்தது. காலில் படுகாயம் ஏற்பட்டதால் சதீசை போலீசார் போளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்