திருவண்ணாமலையில் தூய்மை கணக்கெடுப்பு குறித்த சிறப்பு முகாம்- கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நடைபெற்ற தூய்மை கணக்கெடுப்பு குறித்த சிறப்பு முகாமை கலெக்டர் கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2019-09-10 23:15 GMT
திருவண்ணாமலை,

தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து ஊரகப் பகுதிகளில் ‘தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் -2019’ என்ற மின்னணுவியல் கணக்கெடுப்பு கிராமப்புறங்களின் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் கடந்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி முதல் வருகிற 15-ந் தேதி வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கணக்கெடுப்பில் தங்கள் கருத்துகளை மிகவும் எளிய முறையில் தெரிவித்திடும் வகையில் 2 வழிகளில் அரசால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு மொபைலில் go-o-g-le pl-ay மூலம் SSG 2019 என்ற ஒரு முறை மட்டுமே பதில் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கைபேசி செயலி மூலமும், ஆண்ட்ராய்டு மொபைல் இல்லாதவர்கள் 18005720112 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிற்கு போன் செய்து வாய் வழி மூலமும் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

இந்த தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் குறித்த சிறப்பு முகாம் மகளிர் திட்டம் சார்பில் நேற்று திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த முகாமை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களின் பங்கேற்பு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு தூய்மை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இதில் மகளிர் திட்ட அலுவலர் சந்திரா, நகராட்சி ஆணையர் சுரேந்திரன், தாசில்தார் அமுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்