வீராணம் ஏரியில் இருந்து வெள்ளாறு அணைக்கட்டுக்கு தண்ணீர் திறப்பு ; 18 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை

வீராணம் ஏரியில் இருந்து வெள்ளாறு அணைக்கட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 18 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Update: 2019-09-10 22:45 GMT
லால்பேட்டை,

காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வரும். கடந்த சில நாட்களாக கீழணையில் இருந்து தண்ணீர் வரத்து இருந்ததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது கொள்ளிடத்தில் அதிகப்படியான தண்ணீர் வருவதால், வடவாற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஒரு வாரமாக வினாடிக்கு 200 கனஅடி திறந்து விடப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் 2 ஆயிரத்து 120 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் வடவாற்றில் தண்ணீர் நிரம்பி பாய்ந்தோடுகிறது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.80 அடியாக உள்ளது.

ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால், அங்கிருந்து வி.என்.எஸ். மதகு வழியாக சேத்தியாத்தோப்பில் உள்ள வெள்ளாற்றின் குறுக்கே உள்ள 7½ அடி கொள்ளளவு கொண்ட அணைக்கட்டுக்கு வினாடிக்கு 513 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அணைக்கட்டின் நீர்மட்டம் 6½ அடியாக உயர்ந்தது. அங்கிருந்து வெள்ளாறு வழியாக வடலூர் அருகே உள்ள வாலாஜா ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடியும், வாலாஜா ஏரியில் இருந்து குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரிக்கு வினாடிக்கு 200 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இது தவிர உளுத்தூர் ஏரி, அம்பாபுரம், பின்னலூர், மஞ்சக்கொல்லை சிப்பான் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கும் சேத்தியாத்தோப்பு அணைக் கட்டில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கி இருக்கிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மூலம் காவிரி நீரை பயன்படுத்தி கடலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 18 ஏரிகளை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக வறட்சியால் பாதிக்கப்பட்டு இருந்த விவசாயிகளுக்கு தற்போது காவிரியில் இருந்து வரும் நீர் வரத்து அவர்களுக்கு புத்துயிரை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் கடைமடை பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் தங்களை முழுமையாக சம்பா சாகுபடியில் ஈடுபடுத்திக்கொள்வோம் என்கின்றனர்.

மேலும் செய்திகள்