மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கள்ளத்தனமாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவரப்படுவது தடுக்கப்படும்- கலெக்டர் தகவல்

மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கள்ளத்தனமாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவரப்படுவது தடுக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-11 23:15 GMT
வேலூர்,

வேலூர் மாநகராட்சி நேதாஜி காய்கறி, பழம் மற்றும் பூ அங்காடி மையத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று வழங்கினார். அப்போது அவர், வியாபாரிகள், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்று கூறி, அவர்களுக்கு துணி பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக, இயற்கை பாதுகாப்பை கருத்தில் கொண்டு பருவமழை போதிய அளவு கிடைக்காமல் நிலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை கடந்த ஜனவரி முதல் தமிழகத்தில் தடை செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

மத்திய அரசு இன்று (நேற்று) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி வரை தூய்மையே சேவை விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த நாட்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்கள், வியாபாரிகள், இளைஞர்கள், மாணவ -மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்கு மாற்றாக மற்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்படும்.

மேலும் அக்டோபர் 3-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் புழக்கத்தில் இருந்தால் அவைகள் பறிமுதல் செய்யப்படும்.

நமது அண்டை மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லாத காரணத்தால் நமது மாவட்டத்தில் இவைகள் கள்ளத்தனமாக கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது. மாவட்டத்தில் அமைந்துள்ள மாநில எல்லை சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இப்பொருட்கள் கொண்டுவரப்படுவது தடுக்கப்படும்.

மாவட்டத்தில் இவற்றை படிப்படியாக அறவே ஒழித்திட அனைத்து வட்டாரங்களில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களை கொண்டு சோதனை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு முறையான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இவை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, மாநகராட்சி சுகாதார அலுவலர் மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர் சிவா மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்