திருவொற்றியூரில் ரூ. 200 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைச்சர் டி.ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்

திருவொற்றியூரில் ரூ.200 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிக்காக, அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று அடிக்கல் நாட்டினார்.

Update: 2019-09-11 22:30 GMT
திருவொற்றியூர், 

திருவொற்றியூரில் ரூ.200 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிக்காக, அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று அடிக்கல் நாட்டினார்.

சூரை மீன்பிடி துறைமுகம்

ஆழ்கடல் மீன்பிடி தொழிலை ஊக்கப்படுத்தவும், சூரை வகை மீன்களை அதிகளவில் பிடித்து ஏற்றுமதி செய்திடவும், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் இடநெருக்கடியை குறைத்திடவும் ரூ.200 கோடி மதிப்பீட்டில் சென்னை திருவொற்றியூர் குப்பத்தில் சூரை மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு அறிவித்தார்.

அதன்படி மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலம் சூரை மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான அரசாணை வழங்கி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்.

அப்போது அவர் கூறும்போது, “இந்த புதிய மீன்பிடி துறைமுகம் மூலம் 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 25 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும். சென்னை துறைமுகத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வர இருக்கிறது. அ.தி.மு.க அரசு சார்பில் எத்தனை நிறுவனங்கள் மற்றும் மூதலீடுகளை கொண்டு வந்துள்ளோம் என்பது குறித்து பட்டிமன்றம் நடத்த நாங்கள் தயார். விவாதத்துக்கு மு.க.ஸ்டாலின் தயாரா?” என்றார்.

இதில் மீன்வளத்துறை இயக் குனர் ஜி.எஸ்.சமிரான், சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தா லட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை

இந்த திட்டத்தின் மூலம் 849 மீட்டர் நீளம் தெற்கு அலை தடுப்பு சுவர், 550 மீட்டர் நீளத்திற்கு வடக்கு அலை தடுப்பு சுவர், 550 மீட்டர் நீளம் கொண்ட பெரிய மற்றும் சிறிய படகு அணையும் தளமும், 550 மீட்டர் நீளம் கொண்ட தடுப்பு சுவர், 163 சதுர மீட்டரில் மீன்பிடி துறை நிர்வாக கட்டிடமும், 258 சதுர மீட்டரில் வலை பின்னும் கூடமும், 300 சதுர மீட்டரில் சிறு மீன்கள் ஏலக்கூடமும், 765 சதுர மீட்டரில் ஆழ்கடல் மீன் ஏல விற்பனை கூடமும், 1,103 சதுர மீட்டரில் பதப்படுத்துதல் கூடமும், 100 சதுர மீட்டரில் படகுகள் பழுது பார்க்கும் கூடம் அமைக்கப்படுகிறது.

மேலும் 177 சதுர மீட்டரில் மீனவர்களின் பொருட்களை பாதுகாக்கும் இடமும், 36 சதுர மீட்டரில் பெண்கள் மற்றும் ஆண்கள் சுகாதார மையமும், 2,600 சதுர மீட்டரில் சூரை படகுகளுக்கான சாய்வு தளமும், 138 சதுர மீட்டரில் உணவகமும், 27 சதுர மீட்டரில் பாதுகாவலர் அறையும், 218 சதுர மீட்டரில் மீனவர்களுக்கான ஓய்வு அறையும், 200 சதுர மீட்டரில் வானொலி தொடர்பு கோபுரமும், 321 சதுர மீட்டரில் தங்கும் இடமும், 819 மீட்டர் சுற்று சுவரும், 1,16,708 கன மீட்டரில் தூர்வாருதல் மற்றும் அகற்றுதல், 54,093 கன மீட்டரில் நிலத்தை சமன்படுத்தும் பணிகளும், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளும் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு முறையான கடலோர மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

மீன்களின் தரம் குறையாமல்...

இத்துறைமுகம் அமைவதின் மூலம் சுமார் 500 விசை படகுகள், 300 சிறிய வகை படகுகள் நிறுத்தும் வசதியும், மீன்களை பதப்படுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்தப்படும்.

மேலும் சுகாதாரமான முறையில் கையாளுவதற்கு வசதிகள் இருப்பதால் மீன்களின் தரம் குறையாமல் பாதுகாக்கப்படும். எனவே மீன்களின் விலை மதிப்பு உயர்ந்து தங்களின் மீன்களை அதிக விலைக்கு விற்க முடியும். இதனால் மீனவர் பொருளாதாரமும் மேம்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்