விபத்து இழப்பீடு வழங்காததால்: திருவள்ளூரில் அரசு பஸ் ஜப்தி

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் இறந்த வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Update: 2019-09-12 22:45 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பவுண்ட் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 19). தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 18.11.2010 அன்று மணிகண்டன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

ஈக்காடு மருத்துவமனை அருகே வந்தபோது எதிரே திருவள்ளூரில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற மாநகர அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மோட்டார் வாகன முதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, மணிகண்டனின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.12 லட்சத்து 77 ஆயிரத்து 110 வழங்க வேண்டும் என கடந்த 9.2.2018 அன்று உத்தரவிட்டார்.

இருப்பினும் அரசு போக்குவரத்து கழகம் அந்த தொகையை செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து தற்போது மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி ராம பரந்தாமன், வட்டி ரூ.84 ஆயிரத்து 996 சேர்த்து ரூ.13 லட்சத்து 62 ஆயிரத்து 106 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் அந்த தொகையையும் அரசு போக்குவரத்து கழகம் செலுத்தாததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்த மாநகர பஸ்சில் கோர்ட்டு ஊழியர்கள் உதயகுமார், சீனிவாசன், சவுமியா ஆகியோர் ஜப்தி செய்வதற்கான ஆணையை ஒட்டினார்கள். பின்னர் அவர்கள் அந்த அரசு பஸ்சை திருவள்ளூர் கோர்ட்டு வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்