குழந்தையின் உடலில் 20 நாட்களாக ஊசி இருந்த விவகாரம் : மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவக்குழு விசாரணை

குழந்தையின் உடலில் 20 நாட்களாக ஊசி இருந்த விவகாரம் தொடர்பாக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர்.

Update: 2019-09-12 22:16 GMT
மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்த பிரபாகரன்(வயது 28) மற்றும் மலர்விழி (20) தம்பதிக்கு கடந்த மாதம் 20-ந் தேதி மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து 21-ந் தேதி அவர்களின் குழந்தைக்கு இடது தொடையில் தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னர் குழந்தை தொடர்ந்து இடைவிடாது அழுது கொண்டே இருந்தது.

இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டில் வைத்து குழந்தையை குளிப்பாட்டும்போது தொடையில் ஊசி சிக்கி இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மலர்விழி குழந்தையின் உடலில் இருந்த ஊசியை அகற்றினார்.

இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, கடந்த 20 நாட்களாக குழந்தையின் உடலில் ஊசி இருந்த சம்பவம் தொடர்பாக, அதற்கு காரணமான டாக்டர் மற்றும் நர்சு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் குழந்தை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே குழந்தையின் உடலில் ஊசி சிக்கியிருந்தது தொடர்பாக ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் பதில் அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் குழந்தையின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட டாக்டர் மற்றும் நர்சு மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கோவை மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பி.கிருஷ்ணா தலைமையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் லட்சுமணசுவாமி, பொள்ளாச்சி தலைமை அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் நல நிபுணர் வாணி ரங்கராஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் நேற்று மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது குழந் தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டுக்கு சென்று குழந்தையை பார்வையிட்டனர். பின்னர் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த குழந்தைகள் நல டாக்டர்கள் மற்றும் தடுப்பூசி போட்ட நர்சு ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்