3 மாவட்டங்களுக்கு தேவையான 1,350 டன் யூரியா உரம் ரெயில் மூலம் ஈரோட்டுக்கு வந்தது

3 மாவட்டங்களுக்கு தேவையான 1,350 டன் யூரியா உரம் ரெயில் மூலம் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

Update: 2019-09-12 22:00 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் மற்றும் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

நெல் நடவு பணிக்காக விவசாயிகள் தங்களது நிலத்தை உழுது பக்குவப்படுத்தி வருகிறார்கள். மேலும் நடவுக்காக நெல் நாற்றுகளும் வளர்ந்து வருகிறது. விவசாயிகள் நடும்போது மேல் உரமாக யூரியா உரத்தை போடுவது வழக்கம். அதனால் அதன் தேவை தற்போது அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக தனியார் நிறுவனம் சார்பில், கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள ஒரு உரத்தொழிற்சாலையில் ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான 1,350 டன் யூரியா உரம் கொள்முதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த உரம் ரெயில் மூலம் ஈரோட்டிற்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது.

21 பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட 1,350 டன் யூரியா உரத்தை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினர். பின்னர் அந்த லாரிகள் ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் உரக்குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கிருந்து இந்த உரம் தனியார் உரக்கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும் செய்திகள்