ரூ.1,640 கோடி மோசடியில் சாட்சிகளை அழிக்க அரசு அதிகாரிகள் முயற்சி மன்சூர்கான் உள்பட 7 பேரிடம் சி.பி.ஐ. தீவிர விசாரணை

ரூ.1,640 கோடி மோசடியில் சாட்சிகளை அழிக்க அரசு அதிகாரிகள் முயன்றதாக தெரிகிறது. இதுதொடர்பாக மன்சூர்கான் உள்பட 7 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-09-13 22:00 GMT
பெங்களூரு, 

ரூ.1,640 கோடி மோசடியில் சாட்சிகளை அழிக்க அரசு அதிகாரிகள் முயன்றதாக தெரிகிறது. இதுதொடர்பாக மன்சூர்கான் உள்பட 7 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.1,640 கோடி மோசடி

பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடைகள் நடத்தி வந்தவர் மன்சூர்கான். இவர், தனது நகைக்கடைகளில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி ரூ.1,640 கோடி வசூலித்து மோசடி செய்தார். இதுதொடர்பாக கமர்சியல்தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் மன்சூர்கான் மீது அமலாக்கத்துறையினர் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்துவிட்டு டெல்லிக்கு திரும்பிய மன்சூர்கானை அமலாக்கத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கிடையில், ரூ.1,640 கோடி மோசடி வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில், இந்த வழக்கில் விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், 1,300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே மன்சூர்கான் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்ததால், அவர்களும் கைது செய்யப்பட்டனர். தற்போது அந்த அதிகாரிகள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

மன்சூர்கானிடம் விசாரணை

இதற்கிடையில், இந்த மோசடி வழக்கில் முக்கிய சாட்சிகளை அழிக்க அரசு அதிகாரிகள் முயன்றதாக தெரிகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டின் அனுமதி பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மன்சூர்கான் உள்பட 7 பேரை நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது காவலில் எடுத்துள்ளனர். மன்சூர்கான் உள்பட 7 பேரிடமும் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

குறிப்பாக மன்சூர்கானிடம், அவர் முறைகேட்டில் ஈடுபட உதவிய அரசு அதிகாரிகள், இந்த வழக்கில் சாட்சிகளை அழிக்க முயன்ற அதிகாரிகள் ஆகியோர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் மற்ற அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களுக்கு உள்ள தொடர்பு உள்ளிட்டவை குறித்தும் மன்சூர்கானிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்