கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-09-13 22:00 GMT
கோவில்பட்டி, 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

யூனியன் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் கிராம மக்கள் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொன்னுசாமி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அன்புராஜ் ஆகியோர் தலைமையில், கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், யூனியன் ஆணையாளர் கிரியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், ‘பாண்டவர்மங்கலம் கிராமத்தில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளரை மாற்ற வேண்டும். அதேபோன்று பஞ்சாயத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் பஞ்சாயத்து செயலாளரையும் இடமாற்றம் செய்ய வேண்டும். பாண்டவர்மங்கலம் குளத்துக்கு தண்ணீர் வரும் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

நடவடிக்கை

மனுவை பெற்றுக்கொண்ட யூனியன் ஆணையாளர் கிரி, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்