சேண்பாக்கம் துணைமின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபர் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

வேலூரில் வடமாநில வாலிபர் ஒருவர் மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

Update: 2019-09-13 23:15 GMT
வேலூர்,

வேலூர் சேண்பாக்கத்தில் மின்வாரியத்தின் துணை மின்நிலையம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை சில ஊழியர்கள் பணியில் இருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் துணை மின்நிலையத்தின் கேட் பூட்டப்பட்டிருந்தது.

அப்போது திடீரென வாலிபர் ஒருவர் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து உள்ளே வந்தார். பின்னர் அவர் அங்குள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உஷாரான அவர்கள் வேலூர் முழுவதும் செல்லும் மின்சாரத்தை நிறுத்தினார்கள்.

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்ததும் அங்கு குவியத்தொடங்கினர். அவர்கள் டிரான்ஸ்பார்மரில் ஏறிய அந்த வாலிபரை கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து இதுபற்றி வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கும், வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் விரைந்து வந்தனர். அவர்கள் டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய அந்த வாலிபரை கீழே இறங்கி வருமாறு கூறினர். நீண்டநேரம் பேசியும் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் ஏணி மூலம் ஏறி அவரை பத்திரமாக மீட்டனர். ஆனாலும் டிரான்ஸ்பார்மரில் ஏறியதால் அவருடைய உடலில் சிலபகுதிகளில் காயம் ஏற்பட்டது. மின் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மின்சாரத்தை நிறுத்தியதால் அந்த நபர் உயிர் தப்பினார்.

மீட்கப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெயர் திகம்பர் சிங் என்பதும், சத்தீஸ்கார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் சத்தீஸ்கார் மாநிலத்தில் இருந்து லாரியில் வந்ததாகவும், இந்தப்பகுதியில் தன்னை இறக்கிவிட்டு சென்றுவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று உள்ளார். எனவே டிரான்ஸ்பார்மர் மீது ஏறியபோது ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரை போலீசார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் சேண்பாக்கம் துணை மின் நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்