இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் மாணவர்கள் காவல் மன்றத்தை தொடங்கி வைத்து கலெக்டர் பேச்சு

இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று, மாணவர்கள் காவல் மன்றத்தை தொடங்கி வைத்து கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார்.

Update: 2019-09-13 23:30 GMT
வேலூர்,

மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு மாணவர் காவல் மன்ற திட்டத்தை கொண்டு வந்தது. வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் 199 பள்ளிகளில் மாணவர்கள் காவல் மன்றம் தொடங்கப்படுகிறது. இதில் 8-ம் வகுப்பில் 22 பேர், 9-ம் வகுப்பில் 22 பேர் என 44 மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுவார்கள். இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் காவல் மன்ற தொடக்கவிழா நேற்று சத்துவாச்சாரியில் உள்ள ஹோலிகிராஸ் பள்ளியில் நடந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்று பேசினார். வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மாணவர்கள் காவல் மன்றம் குறித்து பேசினார். கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி மாணவர்கள் காவல் மன்றத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாணவர்கள் காவல் மன்றம் என்பது ஒரு சமுதாய சேவைக்கானது. இன்றைய இளைஞர்கள் சவால்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுடைய லட்சியமும், பயணமும் தெளிவாக இல்லை. முன்பு கூட்டு குடும்பம் இருந்தது. இதனால் பெரியவர்களின் அரவணைப்பும், அறிவுரையும் கிடைத்தது. இன்று கூட்டுக்குடும்பம் இல்லை. அதனால் பெரியவர்களின் அரவணைப்பு கிடைப்பதில்லை.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் அதிக அளவில் இளைஞர்கள் சேர்ந்து வருகிறார்கள். இதனால் இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இந்திய மக்கள் தொகையில் 63 சதவீதம் பேர் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். அவர்களை நல்வழிப்படுத்தி வலிமையான இந்தியாவை உருவாக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தோல்விதான் வெற்றிக்கு படிக்கட்டு என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்கள் நம்முடைய வளர்ச்சிக்காக கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால் அது தவறான பழக்கங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் குற்றங்கள் அதிகரிக்கிறது. இளைஞர்களுக்கு சுயக்கட்டுப்பாடு தேவை.

அதற்கு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். அதன்மூலம் அவர்களுக்கு சமூக பொறுப்புகளும், குடும்பத்தினர் மீது பாசமும் ஏற்படும். காவலர்களுடன், மாணவர்கள் இணைந்து செயல்படும்போது நேர்மையான சிந்தனை, சமூக பொறுப்புணர்வு, நாட்டுப்பற்று மற்றும் நல்லொழுக்கம் ஏற்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலகிருஷ்ணன், பன்னீர்செல்வம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்