அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-09-13 22:15 GMT
தளி, 

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. அதன் மூலமாக அணைக்கு மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அணையை அடிப்படை நீராதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

மழை காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தையும், அப்போது அணையில் உள்ள நீர்இருப்பை கொண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் நிலங்களை உழுது நெல், வாழை, கரும்பு, உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். தென்னை சாகுபடி பரவலாக நடைபெற்றாலும் கூட அமராவதி அணை பாசனத்தில் நெல் சாகுபடியே பிரதானமாக உள்ளது.

கடந்தாண்டில் தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் நெல்சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் தங்கு தடையின்றி கிடைத்தது. இதனால் விவசாயிகளும் கூடுதல் விளைச்சலை பெற்றனர். வருமானமும் எதிர்பார்த்த அளவு கிடைத்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றத்தை அளித்ததால் அணையிலும் நீர்இருப்பு குறைந்து விட்டது.

மேலும் வெப்பத்தின் தாக்குதலால் குலைதாக்குதல் நோய்க்கு நெற்பயிர்கள் அகப்பட்டு கொண்டது. இதனால் கடைசி பட்ட நெல்சாகுபடியில் விளைச்சல் பாதிக்கப்பட்டது. அதன் பின்பாக அணைக்கும் நீர்வரத்து ஏற்படவில்லை. சாகுபடிக்கும் தண்ணீர் வினியோகம் நடைபெறவில்லை. இதனால் விளைநிலங்கள் சாகுபடி செய்யப்படாமல் தரிசு நிலங்களாக காட்சி அளித்து வந்தன.

இந்த நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் அதிகரித்தது. இதையடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துருவை அதிகாரிகள் தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளார்கள். அதில் 20-ந் தேதி தண்ணீர் திறப்புக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு முறையாக அனுமதி அளித்த பின்பாக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு அணையில் இருந்து அமராவதி ஆறு பிரதான கால்வாய் ராமகுளம் மற்றும் கல்லாபுரம் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு 65 நாட்களில் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு 45 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது. அதேபோன்று பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 8 வாய்க்கால் பாசனத்திற்கு 120 நாட்களில் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு 75 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்றைய நிலவரப்படி அணையில் 84..03 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 537 கனஅடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. தண்ணீர் திறப்பதற்கு முன்பாக மழை பெய்து அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதற்கான வாயப்புகளும் நிலவுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்