அய்யம்பாளையம், சித்தரேவு பகுதிகளில் ஓடைகளில் மணல் அள்ளும் கும்பல்

அய்யம்பாளையம், சித்தரேவு பகுதிகளில் ஓடைகளில் இரவு, பகலாக மர்மகும்பல் மணலை அள்ளி செல்கிறது.

Update: 2019-09-14 23:00 GMT
பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி, சித்தரேவு, அய்யம்பாளையத்தை சுற்றி நொச்சி ஓடை, சின்னஓடை, புலியூத்து ஓடை, பூசாரி ஓடை, சிவக்காட்டு ஓடை, முத்துப்பேச்சி ஓடை, எருக்காட்டு ஓடை, வறட்டாறு ஓடை, வண்ணாம்பாறை ஓடை, இனிச்சபள்ளி ஓடை, வரட்டோடை, ஓணங்கரட்டு ஓடை என 30-க்கும் மேற்பட்ட ஓடைகள் உள்ளன.

இந்த பகுதிகளில் உள்ள ஓடைகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் மழைக்காலத்தில் மலைப்பகுதிகளில் இருந்து ஆற்று தண்ணீரில் மணல் அதிகளவில் அடித்து வரப்பட்டு ஓடைகளில் தேங்கி கிடக்கும். கடந்த ஆண்டு கஜா புயலினால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அதிகளவில் ஓடைகளில் மணல் குவிந்து கிடக்கின்றது.

இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளும் மணல் அள்ளும் கும்பல் டிராக்டர், லாரிகளில் மணலை அள்ளி செல்கின்றனர். முன்பு இரவு நேரத்தில் மணலை அள்ளி வந்தனர். தற்போது பகல் நேரத்திலும் சர்வ சாதாரணமாக மணலை அள்ளி செல்கின்றனர். இதனால் ஓடைகளில் ஆங்காங்கே ராட்சத பள்ளம் ஏற்படுகிறது.

மணல் அள்ளப்படுவதால் ஓடைகளை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்த்துளை கிணறுகள் மற்றும் கிணறுகளில் நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும் 1,000 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்தாலும் தண்ணீர் இருப்பதில்லை. மணல் அள்ளுவதால் மண்வளமும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே ஓடைகளில் மணல் அள்ளுவதை தடுக்க போலீசாரும், வருவாய்த்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்