சேலத்தில் லாரி அதிபரை கொலை செய்ய முயற்சி: கூலிப்படையை ஏவிய அத்தை உள்பட 3 பேர் கைது

சேலத்தில் லாரி அதிபரை கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் கூலிப்படையை ஏவிய அத்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய கும்பல் தலைவனின் கால் முறிந்தது.

Update: 2019-09-14 22:45 GMT
சேலம், 

சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). லாரி அதிபரான இவர், கடந்த 9-ந் தேதி இரவு காரிப்பட்டி அருகேயுள்ள குள்ளம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, அங்கு வந்த 2 மர்மநபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரமேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி விஜயன் (29), ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்த மோகன் (26) ஆகியோர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். போலீசாரின் விசாரணையில், அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும், அம்மாபேட்டையில் உள்ள 750 சதுரடி நிலம் தொடர்பாக லாரி அதிபர் ரமேசுக்கும், அவரது தந்தையின் சகோதரியான சரோஜா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மருமகன் ரமேசை தீர்த்துக்கட்ட முடிவு செய்த அத்தை சரோஜா, கூலிப் படையை சேர்ந்தவர்களின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது. அதன்படி கூலிப்படை தலைவனான சேலத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவரை தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் தருவதாக சரோஜா கூறியதோடு, முதற்கட்டமாக ரூ.3 லட்சத்தை கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் இருந்து பணத்தை வாங்கிய ரஞ்சித், தனது கூட்டாளிகளான விஜயன், மோகன் ஆகிய 2 பேரை ரமேசை கொலை செய்ய அனுப்பி வைத்துள்ளார். அந்த வகையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே இருந்து கண்காணித்த 2 பேரும் அவர் வெளியே செல்வதை அறிந்து பின்தொடர்ந்து சென்றனர். பின்னர், காரிப்பட்டி பகுதியில் சென்றபோது அவர்கள், ரமேசை சரமாரியாக தாக்கியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சரோஜா மற்றும் ரமேசின் சித்தப்பா மகள் மேனகா, உறவினர் பழனிவேல் ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், கூலிப்படை தலைவனாக செயல்பட்ட ரஞ்சித்தை அவரது வீட்டிற்கு சென்று போலீசார் தேடினர். ஆனால் அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில், காரிப்பட்டி பகுதியில் நேற்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். பின்னர், அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அப்போது, அங்குள்ள காட்டுப் பகுதியில் செல்லும்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை போலீசார் மீட்டு வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் அவர், லாரி அதிபர் ரமேசை வெட்டிய வழக்கில் தொடர்புடைய கூலிப்படை தலைவன் ரஞ்சித் என்பது தெரியவந்தது. இவரது வீட்டில் இருந்து ரூ.2 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்