பள்ளிபாளையம், ஆவாரங்காடு பகுதிகளில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள்

பள்ளிபாளையம், ஆவாரங்காடு பகுதிகளில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெற்றன. இதில், அமைச்சர் தங்கமணி, கலெக்டர் ஆசியா மரியம் பங்கேற்றனர்.

Update: 2019-09-14 22:00 GMT
பள்ளிபாளையம்,

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம், ஆவாரங்காடு ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம்கள் நேற்று நடைபெற்றன. இந்த முகாம்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 27 மாணவ, மாணவிகளுக்கு 58 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளை வழங்கினார். தொடர்ந்து முகாமில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, மருத்துவ வசதி, குடிநீர், சாலை உள்ளிட்ட பொதுமக்கள் அளித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டார்.

இந்த முகாமில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:- மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும், முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்வு முகாம்களில் இதுவரை 20 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இம்மனுக்கள்மீது ஒரு மாதத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார்.

பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.7 ஆயிரம் கோடி அளவிற்கு நிதிச்சுமை ஏற்பட்டிருந்தாலும் அதனை தமிழக அரசு சரிசெய்து கொண்டு, பொதுமக்களை பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த செப்டம்பர் மாதத்தோடு காற்றாலை மின் உற்பத்தி நின்றுவிடும்.

எனவே, அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாடு மின்வாரியத்தில் 4,500 மெகாவாட், மத்திய தொகுப்பில் இருந்து 6,500 மெகாவாட், நீண்டகால கொள்முதல் 3,300 மெகாவாட், நீர்மின் திட்டத்தில் 2,000 மெகாவாட் ஆகிய மின் உற்பத்திகள் கிடைத்து வருவதால் தமிழகத்தில் எப்போதும் மின்வெட்டு ஏற்படாது.

மத்திய மின்துறை புதிய மின்கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது. அது குறித்த வரைமுறைகள் இன்னும் தமிழக அரசுக்கு வந்து சேரவில்லை. அது கிடைத்த பின்பு மின் நுகர்வோர்கள் நலனை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். உச்சநீதிமன்ற ஆணையின்படி, அனைத்து மாநிலங்களிலும் பணி நியமனத்தில் பிற மாநிலத்தவரும் சேர்த்துக்கொள்ள வேண்டி உள்ளது. அதையே தமிழ்நாடு மின்சார வாரியமும் கடைபிடிக்கிறது.

இனி, வரவிருக்கும் காலங்களில் தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தீர்வு காணப்படும். வடமாநிலத்தவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டாலும் தமிழ் தெரிந்தால்தான் அவர்கள் பணியை தொடர முடியும். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வயர் மேன், கேங் மேன், உதவி பொறியாளர் ஆகிய பதவிகளுக்கு 6 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில் சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் பாலசுப்ரமணியம், தாசில்தார் தங்கம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் திருமூர்த்தி, பள்ளிபாளையம் கூட்டுறவு சங்க தலைவர் சுப்பையா, முன்னாள் நகர்மன்ற தலைவர் வெள்ளியங்கிரி, முன்னாள் துணைத்தலைவர் சுப்ரமணி, ஒன்றிய முன்னாள் தலைவர் செந்தில், முன்னாள் ஊராட்சி தலைவர் மாதேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்