சிறப்பு பூஜை செய்வதாக கூறி: பெண்களிடம் 95 பவுன் நகை மோசடி - கோவில் பூசாரிக்கு தர்மஅடி

சிறப்பு பூஜை செய்வதாக கூறி பெண்களிடம் 95 பவுன் நகை மோசடி செய்த கோவில் பூசாரியை பாதிக்கப்பட்ட பெண்களே தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-14 23:11 GMT
பூந்தமல்லி,

சென்னை அமைந்தகரை பொன்வேல் தோட்டம், 5-வது தெருவில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியான ஆனந்தன் (வயது 25) என்பவர், கோவிலுக்கு வரும் பெண்களிடம், கலசத்தில் தங்க நகைகளை வைத்து பூஜை செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். பிரிந்து உள்ள கணவன்-மனைவி ஒன்று சேருவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என கூறினார்.

இதனை நம்பி கோவிலுக்கு வந்த சில பெண்கள், தங்களது குடும்ப பிரச்சினைகள் தீர சிறப்பு பூஜை செய்யவேண்டுமென தங்கள் வீட்டில் உள்ள நகைகளை பூசாரி ஆனந்தனிடம் கொடுத்தனர். அந்த நகைகளை வாங்கிய அவர், கலசத்தில் வைத்து பூஜை செய்தார்.

பின்னர் 45 நாட்கள் கழித்து நகைகளை திருப்பி தருகிறேன் என கூறினார். ஆனால் அதன்பிறகும் அவர் நகைகளை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

இதனால் அவரிடம் நகைகளை கொடுத்து ஏமாற்றம் அடைந்த பெண்கள் சிலர், ஆத்திரத்தில் பூசாரி ஆனந்தனை சரமாரியாக தாக்கி அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் ஆனந்தன், கோவிலுக்கு வரும் பெண்களிடம் அவர்களின் குடும்ப சூழ்நிலையை அறிந்து, கலசத்தில் நகைகளை வைத்து சிறப்பு பூஜை செய்தால் கஷ்டம் தீரும் என்று கூறி அவர்களிடம் இருந்து நகைகளை வாங்கி பூஜை செய்வது போல் நடித்து, நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தது தெரிந்தது.

இவ்வாறு பல பெண்களிடம் சுமார் 95 பவுன் நகைகளை வாங்கி மோசடி செய்ததும், அந்த நகைகளை அடகு வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவராக புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். பூசாரி ஆனந்தனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்