மணல் கடத்தலை தடுக்காத சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

மணல் கடத்தலை தடுக்காத சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-09-15 21:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் தாங்கள் பணிபுரியும் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அனைவரும் தாங்கள் பணியாற்றும் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக பிரச்சினைகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும்.

மணல் கடத்தலையும், சாராய விற்பனையையும் தடுக்காத சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை நடக்கிறது. அதனை முழுமையாக தடுக்க வேண்டும். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதியில் பள்ளி நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும். போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்