அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து கத்திமுனையில் கல்லூரி மாணவர்களிடம் நகை, செல்போன்கள் பறிப்பு

பொத்தேரியில் அடுக்குமாடி குடியிருப்புகள் புகுந்து கத்திமுனையில் கல்லூரி மாணவர்களிடம் 4 பவுன் தங்க நகை, 9 செல்போன்கள், 2 லேப்டாப்புகள் ஆகியவற்றை பறித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-09-15 21:45 GMT
வண்டலூர்,

விருதுநகர் மாவட்டம் மஜீத்நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 22). இவர் பொத்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அதே பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவருடன் விக்னேஷ், பாலாஜி, அகஸ்டின், கோபி, ராஜசேகர், செல்வகணேஷ் உள்பட 10 நண்பர்கள் தங்கி அதே பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10 பேரும் அவர்கள் தங்கியிருந்த அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பியது.

இதனால் அதிர்ச்சியடைந்து எழுந்த அவர்களிடமிருந்து கத்தியை காட்டி மிரட்டி 4 பவுன் தங்க நகை, 9 செல்போன்கள் மற்றும் 2 லேப்டாப் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் உடனடியாக மறைமலைநகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அப்பகுதி தெருக்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்