வழக்கு தொடர்பாக கைது செய்ய போலீசார் சென்றபோது, கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து இலங்கை அகதி தப்பி ஓட்டம்

வழக்கு தொடர்பாக கைது செய்ய போலீசார் சென்ற போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து இலங்கை அகதி தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-09-16 22:15 GMT
கோவை,

கோவை போளுவாம்பட்டி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருப்பவர் சந்திரன். இவருடைய மகன் விஜயராஜ் (வயது 23). இவர் மீது ஆலாந்துறை போலீஸ்நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ஆனால் இவர் இந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். எனவே விஜயராஜை போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயராஜ் இலங்கை அகதிகள் முகாமுக்கு வந்துள்ளார். அப்போது முன்விரோதம் காரணமாக அவருக்கும் அங்கு இருந்த லோகநாதன் (49), சிவனேசன் (30) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் மாறிமாறி கையால் தாக்கிக்கொண்டனர். இதில் 3 பேரும் படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தனர். விஜயராஜூக்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சம்பவம் குறித்து கோவை புறக்காவல் நிலைய போலீசார் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் விஜயராஜ் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பதால் அவரை மடக்கிப்பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இதையடுத்து ஆலாந்துறை போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

இதற்கிடையே விஜயராஜூக்கு தலை மற்றும் காலில் எக்ஸ்ரே எடுக்க ஆஸ்ப்பத்திரி ஊழியர்கள் எக்ஸ்ரே கூடத்துக்கு அழைத்து சென்றனர். போலீசாா் தன்னை பிடிக்க வருவதை அறிந்த அவர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

போலீசார் அவரை வெகு நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தொடர்ந்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை அகதி முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்ற போது அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்