அரசு ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் பா.ஜ.க.தொழிற்சங்க செயற்குழுவில் தீர்மானம்

அரசு ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் பா.ஜ.க.தொழிற்சங்க செயற்குழுவில் தீர்மானம்.

Update: 2019-09-16 22:45 GMT
பெரம்பலூர்,

பா.ஜ.க.வின் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பாண்டித்துரை தலைமை தாங்கி பேசினார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் மணிவேல் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினர்களாக சங்கத்தின் மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், பா.ஜ.க.வின் மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம், திருச்சி கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியம், பெரம்பலூர் மாவட்ட தலைவர் இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் அரசு துறைகளில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மத்திய அரசு நிர்ணயித்துள்ள மோட்டார் வாகன அபராத தொகையை பொருளாதார சூழ்நிலை கருதி மாநில அரசு மாற்றி அமைக்க வேண்டும். மழைக்காலங்களில் கட்டிட வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு, வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுகிறது. எனவே மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண தொகையை போல் கட்டிட தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்த பா.ஜ.க.விற்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பா.ஜ.க.வின் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்