ஆக்கிரமிப்பு குளம் மீட்பு விவகாரம்: பாதுகாப்பு கேட்டு சமூக ஆர்வலர் போலீசில் மனு

குளந்திரான்பட்டு குளம் ஆக்கிரமிப்பு மீட்கப்பட்ட பிரச்சினையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு கேட்டும் சமூக ஆர்வலர் துரைகுணா கறம்பக்குடி போலீசில் மனு கொடுத்து உள்ளார்.

Update: 2019-09-16 22:15 GMT
கறம்பக்குடி,

கறம்பக்குடி அருகே உள்ள குளந்திரான்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரைகுணா (வயது 39). சமூக ஆர்வலரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளந்திரான்பட்டு கிராமத்தில் இருந்த வெட்டுகுளத்தை காணவில்லை எனவும், அதை மீட்க தைரியமான அதிகாரிகள் தேவை எனவும் கூறி துண்டு பிரசுரம் வெளியிட்டு இருந்தார். இது கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து குளத்தை ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்டு இருந்த 7½ ஏக்கர் விளைந்த நெற்கதிர்கள் அகற்றப்பட்டன.

இதற்கிடையே அரசு அதிகாரிகளை அவதூறாக சித்தரித்து பொதுமக்களிடம் குழப்பம் ஏற்படுத்துவதாக கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் துரைகுணா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் சமூக ஆர்வலர் துரைகுணா கறம்பக்குடி போலீசில் ஒரு மனு கொடுத்து உள்ளார்.

போலீஸ் பாதுகாப்பு கேட்டு...

அந்த மனுவில், கறம்பக்குடி ஒன்றியம் குளந்திரான்பட்டு கிராமத்தில் இருந்த வெட்டுகுளம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பிரச்சினையில் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களால் அச்சுறுத்தல் உள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

இவர் கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு வெளியிட்ட “ஊரார் வரைந்த ஓவியம்’’ “கீழத்தெரான்’’ ஆகிய 2 புத்தகங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அச்சமயத்தில் துரைகுணா தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் செய்திகள்