5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் சங்கத்தினர் தர்ணா

5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-16 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மனு கொடுக்க இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர் மாநில செயலாளர் மாரியப்பன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

அங்கு அவர்கள், நடப்பு கல்வியாண்டில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோ‌‌ஷமிட்டு சிறிது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் கூட்டரங்கின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கோரிக்கை தொடர்பாக கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மாணவர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்க அறிவுறுத்தினர். அதை ஏற்று, சங்க நிர்வாகிகள் ஒரு சிலர் மட்டும் கூட்டரங்கின் உள்ளே சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதேபோல மணிகண்டம் அருகே நாகமங்கலம் பகுதியை சேர்ந்த குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், தங்கள் பகுதியில் வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் மற்றும் குடிநீர் வசதி பற்றாக்குறையாக இருப்பதாகவும், வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும் எனவே தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதி செய்து கொடுக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.

சமூக பணியாளர்கள் கொடுத்த மனுவில், திருச்சியில் சாலையோரம் சுற்றித் திரியும் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப் பட்டோரை மீட்டு காப்பகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்கென தனியாக ஒரு காப்பகம் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

துறையூர் அருகே மதுராபுரி ஊராட்சிக்குட்பட்ட நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், முசிறி அருகே திண்ணனூர் கிராமத்தில் நரிக்குறவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்திற்கு பட்டா வழங்கி, சிட்டா எடுத்து நிலத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தனர். இதேபோல கேபிள் டி.வி. ஆபரேட்டர் சங்கங்களின் கூட்டமைப்பினர் திரண்டு வந்து கொடுத்த மனுவில், அரசு கேபிள் நிறுவனத்திற்கு கட்டண சேனல்களை கட்டுப் படுத்தி முதல்-அமைச்சர் அறிவித்த விலைக்கு வழங்க வேண்டும். தமிழக கல்வி தொலைக்காட்சியை அனைத்து தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கு வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்திருந்தனர்.

மேலும் செய்திகள்