30 பவுன் நகைக்காக பெண் கழுத்தை அறுத்துக் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

30 பவுன் நகைக்காக பெண்ணை கழுத்தை அறுத்துக் கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

Update: 2019-09-16 23:15 GMT
நாகர்கோவில்,

குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர் ஜார்ஜ் எட்வர்ட். இவருடைய மனைவி பேபி ஜார்ஜ் (வயது 62). இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஜார்ஜ் எர்வர்ட் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். மகன், மகள் இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்தனர். இதனால் வீட்டில் பேபி ஜார்ஜ் மட்டும் தனியாக தங்கி வந்தார்.

எனவே வீட்டு வேலைக்காக அதே பகுதியை சேர்ந்த பிரபு (37) என்பவரை நியமித்து இருந்தார். அதே சமயத்தில் பிரபு தனக்கு பணம் தேவைப்பட்டால் பேபி ஜார்ஜிடம் வாங்கி கொள்வார். இதே போல கடந்த 14-7-2012 அன்றும் செலவுக்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் பிரபுவுக்கு பணம் கொடுக்க அவர் மறுத்துவிட்டார். இதனால் பேபி ஜார்ஜ் மீது பிரபுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. பின்னர் இதுபற்றி தன் நண்பர் வெங்கடேஷ் என்ற வெங்கடாசலபதி (36) என்பவரிடம் கூறியுள்ளார்.

கழுத்தை அறுத்து கொலை

இதைத் தொடர்ந்து பிரபுவும், வெங்கடேசும் சேர்ந்து பேபி ஜார்ஜை கொலை செய்து நகைகளை கொள்ளையடிக்க திட்டம் போட்டார்கள். அதன்படி கடந்த 15-7-2012 அன்று நள்ளிரவில் 2 பேரும் சேர்ந்து பேபி ஜார்ஜ் வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பேபி ஜார்ஜின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அதோடு அவர் கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் நகை மற்றும் 2 பவுன் மோதிரம், வீட்டில் இருந்த 12 பவுன் நகை என மொத்தம் 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, வெங்கடேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

மேலும் இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கும், வெங்கடேசுக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மீனாட்சி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்