நெல்லிக்குப்பத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் மயங்கி விழுந்த காங்கிரஸ் நிர்வாகி சாவு

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2019-09-16 23:15 GMT
நெல்லிக்குப்பம்,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரையாற்றினர். அப்போது கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் முருகன்(வயது 60) பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார்.

கட்சியினர் அஞ்சலி

இதில் அதிர்ச்சியடைந்த கட்சி நிர்வாகிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து அவரது உடலுக்கு கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். உண்ணாவிரத போராட்டத்தில் மயங்கி விழுந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் உயிரிழந்த சம்பவம் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இறந்த முருகனுக்கு அனுஷியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்