டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்கள் மீது மோதிய லாரி, வயலில் கவிழ்ந்தது; டிரைவர் காயம் - மின் தடையால் மக்கள் அவதி

பாபநாசம் அருகே டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்கள் மீது மோதிய லாரி, வயலில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் காயமடைந்தார். மின்தடையால் மக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2019-09-16 22:15 GMT
பாபநாசம், 

கரூரில் இருந்து காரைக்காலுக்கு மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை நாகப்பட்டினத்தை சேர்ந்த மாதவன்(வயது40) ஓட்டினார். இந்த லாரி தஞ்சை மாவட்டம் பாபநாசம் சாலையில் சென்று கொண்டிருந்த போது மதகரம் அருகே லாரி எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் 4 மின்கம்பங்கள் மீது மோதி வயலில் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் மாதவன் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். மின்கம்பங்கள் மீது லாரி மோதியதால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த டிரைவர் மாதவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

மேலும் டிரான்ஸ்பார்மர் சாய்ந்ததால் பம்பு செட்டு மூலம் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மின்வாரியத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று வேறு டிரான்ஸ்பார்மர் மூலம் மக்களுக்கு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் மீது மோதிய லாரி வயலில் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்