சாலைகளை சீரமைக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.

சாலைகளை சீரமைக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-16 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை ஊசுடு தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் கிராமத்தில் ஜிப்மர் ஆஸ்பத்திரியின் கிளை இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ஆஸ்பத்திரிக்கு வரும் சாலைகள் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளன. இதனால் இங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இந்த சாலைகளை சீரமைக்கவேண்டும் என்று தொகுதி எம்.எல்.ஏ.வான தீப்பாய்ந்தானிடம் தொகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக அவர் புதுவை சட்டமன்றத்திலும் கேள்வி எழுப்பினார். ஆனால் அதன்பின்னரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் ஊசுடு தொகுதியை சேர்ந்த மக்கள் சாலைகளை சீரமைக்கக்கோரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்துக்கு தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர்களை தலைமை பொறியாளர் மகாலிங்கம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் அதை ஏற்காத பொதுமக்கள் அலுவலகத்தினுள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஊசுடு தொகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதற்கு தலைமை பொறியாளர் மகாலிங்கம் சம்மதம் தெரிவித்து உடனடியாக வருவதாக தெரிவித்தார்.

அதை ஏற்று பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். அதன்பின் தலைமை பொறியாளர் மகாலிங்கம் ஊசுடு தொகுதிக்கு சென்று நேரில் ஆய்வு நடத்தினார்.

மேலும் செய்திகள்