மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி போல் நடித்து தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது

செங்குன்றத்தில் மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரி போல் நடித்து தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-17 22:45 GMT
செங்குன்றம்,

சென்னை வேப்பேரியை சேர்ந்த தொழில் அதிபர் குணால். இவர் செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று இவரது நிறுவனத்திற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி என்று கூறிக்கொண்டு ஒருவர் வந்தார். அவர், இந்த நிறுவனம் சுற்றுச்சூழல் மாசுக்கு காரணமாக இருப்பதாகவும், அதற்கு தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த வேண்டுமென்றால் தனக்கு ரூ.5 லட்சம் தரவேண்டுமென்று கேட்டுள்ளார். அவ்வாறு தரவில்லை என்றால் மாசுகட்டுப்பாடு வாரியம் மூலம் நிறுவனத்தை பூட்டி சீல் வைத்து விடுவோம் என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த குணால், செங்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர்பீட்டர், அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், மாதவரம் தபால்பெட்டி பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 49) என்பவர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி போல் நடித்து பணம் பறிக்கும் நோக்கத்தில் தொழில் அதிபரை மிரட்டியது தெரியவந்தது. மேலும் இதைப்போல் புறநகர் பகுதிகளில் பல நிறுவனங்களுக்கு அவர் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி போல் சென்று பணம் பறிப்பில் ஈடுபட்டதும் உறுதியானது. இதையடுத்து செங்குன்றம் போலீசார் சுந்தர்ராஜை கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்