பிரதமர் மோடி பிறந்த நாள்: அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் தங்க மோதிரம் அணிவித்தார்.

Update: 2019-09-17 23:00 GMT
நாகர்கோவில்,

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை குமரி மாவட்டத்தில் பா.ஜனதாவினர் சிறப்பாக கொண்டாடினர். நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பிரதமர் மோடி பெயரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது. 69-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் பா.ஜனதா உறுப்பினர்கள் 69 பேர் ரத்ததானம் செய்தனர்.

மேலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், நிர்வாகிகள் முத்துராமன், தர்மலிங்க உடையார், தேவ், மீனாதேவ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தங்க மோதிரம்

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிறந்த 7 குழந்தைகளுக்கு பா.ஜனதா சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த தங்க மோதிரங்களை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், குழந்தைகளுக்கு அணிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழர்கள் நன்றி கெட்டவர்கள் என்று நான் கூறியது, 8 கோடி தமிழர்களை அல்ல. தமிழ் என்ற வார்த்தையை பயன்படுத்தி அரசியல் நடத்துகிறவர்களை பற்றிதான் கூறினேன். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் உரையாற்றியபோது அதற்கு நன்றி சொல்ல யாரும் தயாராக இல்லை.

அரசியல் காரணங்களால் தான் பிரதமருக்கு அவர்கள் நன்றி தெரிவிக்கவில்லை. இதில் இருந்து நான் கூறிய கருத்து ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிரான கருத்து அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட காலத்துக்கு பிறகு கமல்ஹாசன் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார். விமர்சனமும் செய்துள்ளார். அவர் உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய கருத்தை முழுமையாக படிக்க வேண்டும். அவ்வாறு படித்திருந்தால் இதுபோன்ற விமர்சனம் செய்திருக்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு குடைகள், ஆதரவற்ற குழந்தைகள் வசிக்கும் அன்பு இல்லத்தில் மதிய உணவு ஆகியவை பா.ஜனதா சார்பில் வழங்கப்பட்டது.

பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் பாலசுப்பிரமணியபுரத்தில் உள்ள அய்யாவைகுண்டர் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு பழங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மண்டல தலைவர் சுடலை மணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்