பள்ளி வளாகத்தில் தாக்கப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

புதுச்சத்திரம் அருகே பள்ளி வளாகத்தில் தாக்கப்பட்ட ஆசிரியர் மீது 1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-09-17 22:00 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள எஸ்.உடுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சரவணன் (வயது 33). இவர் கடந்த 10-ந் தேதி பணியில் இருந்தபோது பள்ளிக்கு வந்த 10-க்கும் மேற்பட்டோர் சரவணனை சரமாரியாக தாக்கி, தர்மஅடி கொடுத்தனர்.

இது தொடர்பாக ஆசிரியர் சரவணன் கொடுத்த புகாரின்பேரில் எஸ்.உடுப்பத்தை சேர்ந்த சுசிதரன், மணிகண்டன், கார்த்திக் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஆசிரியர் சரவணனும், அங்கன்வாடி பெண் பணியாளர் ஒருவரும் கழிவறையில் தனிமையில் சந்தித்து வந்ததாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எஸ்.உடுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஆசிரியர் சரவணன் சாக்லெட் வாங்கி கொடுத்து கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த மாணவியின் தாயார் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்து உள்ளார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியர் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்