பல்லடத்தில் நீர்நிலைகளை மேம்படுத்தும் பணி - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கிவைத்தார்

பல்லடத்தில் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் நீர்நிலைகளை மேம்படுத்தும் பணியை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கிவைத்தார்.

Update: 2019-09-17 22:15 GMT
திருப்பூர்,

பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட நால்ரோடு அருகில் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட நீர்நிலைகளை மேம்படுத்தும் பணியினை கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில், கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் நீர்நிலைகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 33 ஆயிரத்து 663 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 134 பணிகள் ரூ.15 கோடியில் குடிமராமத்து பணிகளும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 13 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 974 ஏரிகள் மற்றும் குளங்கள் தூர்வாரும் பணிகளும் மற்றும் நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் உயரிய நோக்கத்தில் தனியார் மற்றும் பொதுமக்களின் 100 சதவீத பங்களிப்புடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 122 ஏக்கர் பரப்பளவில் 7 நீர்நிலைகளை மேம்படுத்தும் பணி தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இயன்ற உதவியினை செய்து இயற்கை வளங்களை பாதுகாத்து பிளாஸ்டிக் பயன்பாட்டினை முழுமையாக தவிர்த்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து நல்ல முறையில் பராமரித்து நாம் வாழ்கின்ற காலத்தில் இந்த சமுதாயத்தினை சொர்க்கமாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பல்லடம் நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார், பல்லடம் தாசில்தார் சாந்தி, நகராட்சி பொறியாளர் சங்கர், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்