ராமநாதபுரம் கோர்ட்டில் போலி ஆவணங்கள் மூலம் ஜாமீன் பெற உதவிய கணவன்-மனைவி கைது

ராமநாதபுரம் கோர்ட்டில் குற்ற வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு ஜாமீன் பெற போலி ஆவணங்கள் மற்றும் சான்றிதழ் சமர்ப்பித்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-09-17 22:45 GMT
ராமநாதபுரம்,

தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளி பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் துரைமுருகன். இவர் மீது ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு உள்ளது. இந்த வழக்கில் துரைமுருகன் சார்பில் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்.1 கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி கூட்டாம்புளியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 51), அவரது மனைவி சரசுவதி (49) ஆகியோர் துரைமுருகனுக்கு ஆதரவாக ஜாமீன் கோரி அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர். இந்த மனு, நீதிபதி ஜெனிதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனு மற்றும் ஆவணங்களை பரிசீலனை செய்த நீதிபதிக்கு அந்த ஆவணங்கள் மீது சந்தேகம் எழுந்தது.

இதைதொடர்ந்து உடனடியாக அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை பரிசோதிக்க உத்தரவிட்டார். அதன்படி ரேஷன் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கிய புதுக்கோட்டை தாலுகா கிராம நிர்வாக அலுவலரிடமும், ஸ்ரீவைகுண்டம் சாயர்புரம் கிராம நிர்வாக அலுவலரிடமும் ஜாமீன் சான்றிதழ் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது இந்த சான்றிதழ்களை தாங்கள் வழங்கவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவியிடம் விசாரித்தபோது, தூத்துக்குடியை சேர்ந்த சுதர்சன் என்பவர் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றில் முகவரி மற்றும் பெயர்களை போலியாக மாற்றியதுடன், கிராம நிர்வாக அதிகாரிகளின் சான்றிதழ்களையும் போலியாக தயாரித்து கொடுத்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கோர்ட்டு தலைமை எழுத்தர் முருகன் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜ், அவரது மனைவி சரசுவதி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீஸ் விசாரணையில், மோகன்ராஜ் அடிக்கடி இதுபோன்று போலி ஜாமீன் கொடுத்து அதில் வரும் பணத்தை வைத்து பிழைத்து வந்தது தெரிய வந்துள்ளது.

முக்கிய குற்றவாளியான தூத்துக்குடியைச் சேர்ந்த சுதர்சனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் இதுபோன்று வேறு எங்கெல்லாம் போலி சான்றிதழ் அவர் தயாரித்துக் கொடுத்துள்ளார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்