நாகூரில், லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

நாகூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-18 22:15 GMT
நாகூர்,

நாகை மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின்படி, துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் அறிவுறுத்தலின் பேரில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கால்மாட்டு தெருவில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின்   முரணாக பதிலளித்தார். 

இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர் கையில் மறைத்து வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரத்து 200  மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நாகூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த உதுமான் மகன் யூசுப் (வயது 32) என்பதும், அவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதுமான் யூசுப்பை கைது செய்தனர்.
இதேபோல் யானைகட்டி முடுக்கு தெருவில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நாகூர் போலீசார், லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த தேவூர் ரெட்ட மதகடியை சேர்ந்த சேக் தாவூத் (45) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 800&மும், லாட்டரி சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்