உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2019-09-18 22:00 GMT
மதுரை,

சிவகங்கையைச் சேர்ந்த லட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “இளையான்குடி ஊராட்சியின்கீழ் தாயமங்கலம் கிராமம் உள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தாயமங்கலம் ஊராட்சி கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் வார்டுகள் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால் மேற்கண்ட வார்டுகள் ஏற்கனவே 10 ஆண்டுகளாகவே அவர்களுக்குதான் ஒதுக்கப்பட்டு இருந்தது. இனி நடக்க உள்ள தேர்தலில் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத்துறை முதன்மை செயலாளருக்கு மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை.

இதேபோல்தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு தொடர்பான தற்போதைய அரசாணையை ரத்து செய்துவிட்டு, பஞ்சாயத்து சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி புதிய அரசாணையை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் நேற்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்