சோழவந்தான் அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருந்த வீடுகள் அகற்றம்

சோழவந்தான் அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருந்த வீடுகள் அகற்றப்பட்டன.

Update: 2019-09-18 22:45 GMT
சோழவந்தான்,

சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் சாமி கோவில் மேற்கு பகுதியில் வீடுகள், கடைகள் உள்ளன. இதில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து 4 வீடுகள் கட்டப்பட்டு சிலர் குடியிருந்து வந்துள்ளனர். இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் எச்சரிக்கை செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை வாடகை கேட்டு வந்தனர்.

இதற்கு 4 வீடுகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயன், ஆய்வாளர் வீரசேகர், செயல் அலுவலர்கள் இளஞ்செழியன்,செந்தில் குமார், சுசிலா ராணி மற்றும் ஆலய பணியாளர்கள் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் சென்று அங்கு உள்ளவர்களை காலி செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.

அப்போது அங்கிருந்தவர்கள் வீடுகளை காலி செய்ய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 4 வீடுகளும் இடிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வருவாய் ஆய்வாளர் ராஜன், கிராம நிர்வாக அலுவலர் முத்து ராமலிங்கம், மின்சார வாரிய உதவி என்ஜினீயர் செந்தில்குமார், புஷ்பவனம் உள்பட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்