ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி

ஹெல்மெட் அணியாமல் சென்றதாக போலீசார் தடுத்த போது லாரி மோதி இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்த இளம்பெண்ணின் கால்கள் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.

Update: 2019-09-20 23:45 GMT
செங்குன்றம்,

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் யுவனேஷ். இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா என்ற பிரியதர்சினி (வயது 23). இவர்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது.

நேற்று இரவு 7.30 மணி அளவில் பிரியா, செங்குன்றம் அடுத்த கே.கே.நகர் அருகே உள்ள காவல் உதவி மையம் அருகில் உள்ள பேக்கரியில் தனது தாய் அம்முவின் பிறந்த நாளுக்காக கேக் வாங்கினார். பின்னர் இருசக்கர வாகனத்தில் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது காவல் உதவி மையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையிலான போலீசார், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து கொண்டிருந்தனர்.

அங்கிருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவர், ஹெல்மெட் அணியாமல் சாலையை கடந்து செல்ல முயன்ற பிரியாவின் இருசக்கர வாகனத்தை கம்பால் தடுக்க முயன்றார். இதனால் பிரியா, திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினார்.

அப்போது செங்குன்றத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த லாரி, அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த பிரியா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவரது 2 கால்களும் நசுங்கியது. வலியால் அவர் அலறி துடித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், பிரியாவை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் பிரியா கீழே விழுந்ததற்கு போலீசாரே காரணம் என்று கூறி, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அதே இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நிறுத்தி இருந்த ஊர்க்காவல் படை வீரரின் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கியதுடன் பெட்ரோல் ஊற்றியும் எரித்தனர்.

பிரியா மீது மோதிய லாரியை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். ஆத்திரத்தில் அந்த லாரி கண்ணாடிகளையும் பொதுமக்கள் கல்வீசி தாக்கி அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது.

இதுபற்றி தகவல் அறிந்தும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், பொன்னேரி டி.எஸ்.பி. பவன்குமார் ரெட்டி, சோழவரம் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அதன்பிறகே அந்த பகுதியில் கலவரம் கட்டுக்குள் வந்தது.

இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கலவரத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்