வாக்காளர் பட்டியலில் தவறுகளை திருத்திக்கொள்ள விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ராமன் தகவல்

வாக்காளர் பட்டியலில் தவறுகளை திருத்திக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

Update: 2019-09-20 22:30 GMT
சேலம், 

சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2020-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முன்னேற்பாடு பணிகள், பட்டியலில் உள்ள விவரங்களை வாக்காளர்கள் சரிபார்த்து உறுதி செய்யும் விதமாகவும், ஏதேனும் திருத்தம் இருந்தால் அதனை மேற்கொள்ள வசதியாகவும் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் உள்ள தனது பெயர், வயது, உறவினர் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். இதனை உறுதி செய்யும் வகையில் கடவுச்சீட்டு, வாகன ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, ரே‌‌ஷன் கார்டு, மத்திய-மாநில அரசால் வழங்கப்பட்டு உள்ள அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், விவசாயி அடையாள அட்டை, பள்ளி மாற்று சான்றிதழ், நிரந்தர கணக்கு எண், தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் அடையாள அட்டை, சமீபத்திய தண்ணீர் கட்டண ரசீது, எரிவாயு இணைப்பு ரசீது போன்ற ஆவணங்களில் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், வாக்காளர் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்கள் கைபேசி செயலி மூலம் தவறுகளை வாக்காளர்கள் திருத்திக்கொள்ள விண்ணப்பிக்கலாம். இந்த வசதி www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலமாகவும், (voter helpline) கைபேசி செயலி மூலமாகவும் வருகிற 30-ந் தேதி வரை மேற்கொள்ளலாம். இந்த பணி தொடர்பான விழிப்புணர்வை சுய உதவிக் குழுக்கள் பெருமளவில் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தியாகராஜன், தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) நர்மதா தேவி மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள், அரசு-தனியார் இ-சேவை மையங்களின் இயக்குனர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்