வீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு: ஊராட்சி செயலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாமியார், மருமகள் தீக்குளிப்பு

குன்னம் அருகே, வீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி செயலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாமியார், மருமகள் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-21 22:15 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அல்லிநகரம் ஊராட்சியை சேர்ந்த மேல உசேன் நகரம் கிராமத்தில் சீமான் குளம் உள்ளது. இந்த குளத்தின் மேட்டுப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி, மேல உசேன் நகரம், கீழ உசேன் நகரம் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த பகுதியில் உள்ள மின்மோட்டார் அறையின் பின்புறப் பகுதியில் ராமதாஸ் மனைவி பூங்கொடி (வயது 56) வீடு கட்டி வசித்து வருகிறார். அவர், மின்மோட்டார் அறை உள்ள பகுதி தனது வீட்டிற்கு செல்லும் பாதையில் உள்ளது என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், பூங்கொடியின் வீட்டிற்கு பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதாகவும், இந்த தீர்ப்பை எதிர்த்து அல்லிநகரம் ஊராட்சி சார்பில் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எதிர்ப்பு

இந்நிலையில் அங்குள்ள ஆழ்குழாய் கிணறு பழுதடைந்ததால், அல்லிநகரம் ஊராட்சி சார்பில் அதனருகே புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி சார்பில் அங்கு மின்மோட்டார் பொருத்தும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு பூங்கொடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது பற்றி அல்லிநகரம் ஊராட்சி செயலாளர் கலையரசி, குன்னம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் மேல உசேன் நகரம் மற்றும் கீழ உசேன் நகரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் கிராமங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டனர்.

வாக்குவாதம்

இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவின்பேரில் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர் சுப்பிரமணி, எலக்ட்ரீசியன் சுப்ரமணியன் மற்றும் அல்லிநகரம் ஊராட்சி செயலாளர் கலையரசி ஆகியோர் நேற்று மாலை அந்த பகுதிக்கு சென்று, மின்மோட்டார் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். வீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்துவதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூங்கொடி, அவரது மருமகள் தங்கலட்சுமி(33) ஆகியோர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

வாக்குவாதம் முற்றியதில் பூங்கொடியும், தங்கலட்சுமியும், ‘மின்மோட்டார் பொருத்தும் பணியை தொடர்ந்தால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து செத்து விடுவோம்‘ என்று கூறியுள்ளனர். ஆனாலும் மின்மோட்டார் பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

தீக்குளித்தனர்

இதனால் ஆத்திரமடைந்த பூங்கொடியும், தங்கலட்சுமியும் திடீரென்று வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தங்களது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டனர். உடல் முழுவதும் தீ பரவியதில் வலியால் அலறி துடித்த அவர்கள் அங்கும், இங்கும் ஓடினர். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து பூங்கொடி, தங்கலட்சுமி ஆகியோரின் உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக பூங்கொடி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தங்கலட்சுமி அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தங்களது வீட்டிற்கு செல்லும் பாதையில் ஊராட்சி சார்பில் மின்மோட்டார் பொருத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாமியார், மருமகள் தீக்குளித்த சம்பவம் குன்னம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்