வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் விவரத்தை சரிபார்த்து கொள்ளலாம் - அதிகாரி தகவல்

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் விவரத்தை சரிபார்த்து கொள்ளலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-21 22:45 GMT
சிவகங்கை,

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சென்னை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு செய்யப்பட்ட கிராம சுகாதார நர்சுகள் பணி காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.

இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்நோக்கு சுகாதார பணியாளர் அல்லது துணை நர்சுகள் (ஏ.என்.எம்.) பயிற்சி முடித்து தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 1.7.2019 அன்று அனைத்து வகுப்பினருக்கும், மாற்றுத்திறனாளிகள் உட்பட 18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பு சலுகை உண்டு. உத்தேச பதிவு மூப்பு நாளது தேதி வரை பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் உண்டு.

எனவே மேலே குறிப்பிடப்பட்ட கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் உத்தேச பதிவு மூப்புடைய பதிவுதாரர்கள் வருகிற 24-ந் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு, தங்களது அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அடையாளஅட்டை, சாதிச்சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் அலுவலக வேலை நாட்களில் நேரில் வரவேண்டும். மேலும் அங்கு தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட்ட பதிவு விவரங்களை சரி பார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்