நெடும்பலத்தில் ரூ.49 லட்சத்தில் விதை சேமிப்பு கிடங்கு-அலுவலக கட்டிடங்கள் அமைச்சர் திறந்து வைத்தார்

நெடும்பலத்தில் ரூ.49 லட்சம் மதிப்பிலான விதை சேமிப்பு கிடங்கு மற்றும் அலுவலக கட்டிடங்களை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.

Update: 2019-09-21 22:45 GMT
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் கிராமத்தில் வேளாண்மை துறையில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விதை சேமிப்பு கிடங்கு மற்றும் அலுவலக கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு விதை சேமிப்பு கிடங்கு மற்றும் அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும் 100 விவசாயிகளுக்கு உழவு மானியம் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

5 லட்சம் ஏக்கருக்கு 30 கோடி ரூபாய் உழவு மானியம் ஒதுக்கி திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் 1.75 லட்சம் ஏக்கருக்கு ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் அரசை விமர்சிப்பது சீசனுக்கு தனது படத்தை புரோமட் செய்வதற்கான பேச்சு.

பெண்களுக்கு முழு பாதுகாப்பு

நடிகர் கமல் பெண்கள் மீது கொண்ட அபிமானத்தை பற்றி நடிகை கவுதமியிடம் கேட்டால் தெரியும். நீங்கள் கமல் என்று கேட்டவுடன் சிவப்பு ரோஜாக்கள் கமல் தானே என்று கேட்க தோன்றியது. சுபஸ்ரீ நிகழ்வு மிக துயரமானது. அவரது பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து வேதனை படுகின்றோம். தவறு செய்தது யாராக இருந்தாலும் தண்டனை உண்டு. பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க கூடிய இந்த அரசை விமர்சனம் செய்பவர்கள் நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், வேளாண்மை உதவி இயக்குனர்கள் ஹேமாஹெப்சிபா நிர்மலா, சாமிநாதன், திருத்துறைப்பூண்டி நில வள வங்கி தலைவர் சண்முகசுந்தர், முத்துப்பேட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் நடராஜன் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்