வீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த பெண் சாவு மருமகளுக்கு தீவிர சிகிச்சை

வீட்டிற்கு செல்லும் பாதையில் மின்மோட்டார் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மருமகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2019-09-22 23:00 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே மேலஉசேன் நகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ்(வயது 73). விவசாயியான இவர் தனது மனைவி பூங்கொடி(56), மகன்களான ஊர்க்காவல் படை வீரரான சீனிவாசன், ஜெயராமன் ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள சீமான் குளத்தின் மேட்டுப்பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறார். 2 மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் அல்லிநகரம் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி, மேல உசேன் நகரம், கீழ உசேன் நகரம் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள மின்மோட்டார் அறையின் பின்புறப் பகுதியில் விவசாயியான ராமதாஸ் வீடு உள்ளது. ராமதாஸ் குடும்பத்தினர் மின்மோட்டார் அறை உள்ள பகுதி தனது வீட்டிற்கு செல்லும் பாதையில் உள்ளது என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், ராமதாஸ் வீட்டிற்கு பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதாகவும், இந்த தீர்ப்பை எதிர்த்து அல்லிநகரம் ஊராட்சி சார்பில் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மின்மோட்டார் பொருத்தும் பணி

இந்நிலையில் அங்குள்ள ஆழ்குழாய் கிணறு பழுதடைந்ததால், அல்லிநகரம் ஊராட்சி சார்பில் அதனருகே புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. இதற்கு ஏற்கனவே ராமதாஸ் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனாலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர் சுப்பிரமணி, எலக்ட்ரீசியன் சுப்ரமணியன் மற்றும் அல்லிநகரம் ஊராட்சி செயலாளர் கலையரசி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதிக்கு சென்று, மின்மோட்டார் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். ராமதாஸ், அவரது மனைவி பூங்கொடி, அவரது மகன் சீனிவாசன், சீனிவாசனின் மனைவி தமயந்தி, மற்றொரு மகன் ஜெயராமனின் மனைவி தங்கலட்சுமி(33) ஆகியோர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆனாலும் மின்மோட்டார் பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதனால் ஆத்திரமடைந்த தங்கலட்சுமி, பூங்கொடி ஆகியோர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டனர். இதையடுத்து அவர்களை, ராமதாஸ், அவரது மகன் சீனிவாசன் ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பூங்கொடி நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தங்கலட்சுமி அரியலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தீக்காயமடைந்த ராமதாஸ், சீனிவாசன் ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மேல உசேன் கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீட்டை பூட்டி விட்டு, வெளியூர் சென்றதால் நேற்று அந்தப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்