அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு குறித்து பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி

அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு குறித்து அவர்களின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி திருச்சியில் முதன்முதலாக தொடங்கப்படுகிறது.

Update: 2019-09-22 22:15 GMT
திருச்சி,

தமிழக பள்ளிக்கல்வி துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் வருகைப்பதிவு செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மேலும், ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய பயோ-மெட்ரிக் கருவி பயன்படுத்தப்படுகிறது.

தற்போது மாணவர்கள் பள்ளிக்கு வந்த வருகையை பெற்றோருக்கும் தெரியப்படுத்தும் வகையில் அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் களின் வருகைப்பதிவை பள்ளிக்கல்வி துறையில் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதில் திருச்சி மாவட்டம் சிறப்பாக செயல் படுவதாக உயர் அதிகாரி களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்தநிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனரா?, வரவில்லையா? என வருகைப்பதிவை அவர்களது பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கும் வசதியை சோதனை அடிப் படையில் திருச்சியில் முதன் முதலாக தொடங்க திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள திருச்சி மாவட்ட அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

1,656 பள்ளிகள்

அதைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண் விவரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளதை சரிபார்த்து வருகின்றனர். முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,656 பள்ளிகளில் நடை முறைப்படுத்தப்பட உள்ளதாகவும், அதன்பின் மற்ற மாவட்டங்களிலும் இந்த வசதி தொடங்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்