கேபிள் டி.வி.யில் ‘அனலாக்’ முறையில் ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் - ஆபரேட்டர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கேபிள் டி.வி.யில் அனலாக் முறையில் ஒளிபரப்புவதை ஆபரேட்டர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2019-09-22 22:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் டிஜிட்டல் முறையில் விலையில்லா செட்டாப் பாக்ஸ் மூலம் குறைந்த செலவில் சிறந்த ஒளிபரப்பு வழங்கி வருகிறது. தொலை தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணையம் ‘டிராய்’ சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. இயங்கி வருகிறது.

விலையில்லா செட்டாப் பாக்ஸ்கள் மூலம் 200 சேனல்கள் (அனைத்து தமிழ் சேனல்கள் உள்பட) மாதம் ரூ.154 என நிர்ணயம் செய்து மக்களுக்கு வழங்கியுள்ளது.

எனினும் அரசு செட்டாப் பாக்ஸ்களை பெற்றுள்ள சில கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அதிக லாபம் ஈட்ட அரசு செட்டாப் பாக்ஸ்களை செயலிழக்க செய்து தனியார் செட்டாப் பாக்ஸ்களை மக்களின் விருப்பத்திற்கு மாறாக பொருத்துகின்றனர். செயலிழக்கம் செய்யப்பட்ட செட்டாப் பாக்ஸ்களால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர். அவ்வாறு செயலிழக்கம் செய்யப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை உடனடியாக செயலாக்கம் செய்யத் தவறும் ஆபரேட்டர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சில தனியார் நிறுவனங்கள் முறையாக அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக சிக்னல்கள் அனுப்பி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த இனங்களில் உள்ளாட்சித் துறைகள் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுத்து இணைப்புகள் துண்டிக்கப்படும்.

தனியார் கேபிள் நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான சாலை வழியாகவும், மின் கம்பங்கள் மூலமும், கேபிள் வயர்களை எடுத்து செல்கின்றனர். உரிய அனுமதி பெற்று வாடகை செலுத்தாத இடங்களில் அந்த வயர்களை சம்பந்தப்பட்ட துறை மூலம் துண்டிக்கப்படுவதோடு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதிகளின்படி ‘அனலாக்’ முறையில் சிக்னலில் ஒளிபரப்பு செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டு சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்யும் ஆபரேட்டர்கள் உடனடியாக ஒளிபரப்பை நிறுத்தம் செய்து சந்தாதாரர்களுக்கு டிஜிட்டல் முறையில் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும். மீறினால் சம்பந்தப்பட்ட ஆபரேட்டர்களின் ஒளிபரப்பு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கேபிள் டி.வி. ஆபரேட்டர் அஞ்சலக உரிமம் ரத்து செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழக அரசின் விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை பெறும் மக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதியை விட்டு வேறு பகுதிக்கு செல்லும் போது செட்டாப் பாக்ஸ்களை சம்பந்தப்பட்ட ஆபரேட்டர்களிடம் தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்