அம்மா உணவகங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்; கலெக்டரிடம் மனு

மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்கள் அமர்ந்து உணவு அருந்த வசதியாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2019-09-23 22:30 GMT
விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டர் சிவஞானத்திடம் கொடுத்தனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் கண்மணி என்ற மைதீன் அப்துல்காதர் மற்றும் அக்கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் உட்கார்ந்து சாப்பிட போதிய வசதி இல்லாததால், பொதுமக்கள் நின்று கொண்டு சாப்பிடும் நிலை உள்ளது. பலர் தரையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். கர்ப்பிணிகள் தரையில் உட்கார்ந்து சாப்பிட மிகவும் சிரமப்படுகிறார்கள். முதியவர்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் சாப்பிடுவதற்கு வசதியாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மேலும் அருப்புக்கோட்டையில் அம்மா உணவகத்திற்கு முன்பாக குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சாக்கடை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே அம்மா உணவகத்திற்கு முன்பாக உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்த அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெயகணேஷ் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை அனைத்து கிராமங்களிலும் முறையாக நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம சபை கூட்டம் நடைபெறும் இடம், தேதி ஆகிய தகவல்களை 7 நாட்களுக்கு முன்பே கிராம மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த கூட்டங்களில் கிராம மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை முழுமையாக கேட்டு தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

சாத்தூர் அருகே சிந்துவம்பட்டி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில், சிந்துவம்பட்டி பெரியகுளம் கண்மாய் மற்றும் நீர் வரத்து ஓடையில் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதுடன், அங்கு 100 நாள் வேலை திட்ட பணிக்காக சென்ற பெண்களை வேலை பார்க்க விடாமல் தடுத்துள்ளனர். எனவே கண்மாய் மற்றும் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், விருதுநகர் மெயின் பஜாரில் உள்ள ஜவுளிக்கடை, தனியார் ஆஸ்பத்திரிகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் ஆகியவற்றை தீயணைப்பு துறையினர் மற்றும் இதர அரசு துறையினர் முறையாக ஆய்வு செய்யாமல் தடை இன்மை சான்றிதழ்கள் வழங்கி உள்ளனர். இந்த நிறுவனங்களில் பல்வேறு விதிமீறல்கள் நடக்கிறது. எனவே அரசு அதிகாரிகள் இந்த நிறுவனங்களை முறையாக ஆய்வு செய்து, விதிமீறல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

விருதுநகரை அடுத்த ஓ.கோவில்பட்டியை சேர்ந்த கிராம மக்கள், பட்டாசு ஆலையில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வரும் தங்களுக்கு வீட்டுமனை இல்லை. எனவே இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

விருதுநகர் அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், தம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பின்புறம் பசுமை வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். ஆனால் இதுவரை எங்கள் பகுதிக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்யப்படாத நிலை உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறோம். எனவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்