2 பெண்கள் தீக்குளிப்பு எதிரொலி; சுற்றுச்சுவரை அகற்றிய பொதுமக்கள்

2 பெண்கள் தீக்குளிப்பு எதிரொலி; சுற்றுச்சுவரை அகற்றிய பொதுமக்கள்.

Update: 2019-09-23 22:45 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மேல உசேன் நகரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதன் பின்புறத்தில் ராமதாஸ் என்பவர் வசித்துவந்தார். இந்நிலையில் பாதை பிரச்சினை காரணமாக ஊராட்சி நிர்வாகத்திற்கும், ராமதாஸ் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் ராமதாஸ் குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர். அதனை எதிர்த்து ஊராட்சி நிர்வாகம் மேல் முறையீடு செய்திருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ் குடும்பத்தாருக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட தகராறில் ராமதாஸ் மனைவி பூங்கொடி, அவரது மருமகள் தங்கலட்சுமி ஆகிய இருவரும் பாதை தரக்கோரி உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். இதில் பூங்கொடி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் இருந்து பூங்கொடியின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று பூங்கொடியின் உடல் அடக்கம் செய்ய இருந்த நிலையில் ராமதாஸ் வீட்டின் முன்பு இருந்த ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் முழுவதையும் பொதுமக்களே முன்னின்று அகற்றினர். பின்னர் அந்த பாதை வழியாக பூங்கொடியின் உடலை எடுத்துச்சென்று இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

மேலும் செய்திகள்