தர்மபுரி மாவட்டத்தில் கனமழை: வத்தல்மலை அடிவாரத்தில் தடுப்பணை உடைந்தது 7 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள தடுப்பணை உடைந்ததால் 7 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Update: 2019-09-23 22:45 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை கனமழை பெய்தது. குறிப்பாக பாலக்கோடு, தர்மபுரி, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஏரிகளுக்கு நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. தர்மபுரி இலக்கியம்பட்டி ஏரிக்கும் ஆங்காங்கே உள்ள குளங்கள், விவசாய கிணறுகள் ஆகியவற்றிற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தர்மபுரி பகுதியில் ஓடும் சனத்குமார் நதியின் குறுக்கே சில இடங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடியது. இதனால் சனத் குமார் நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

தடுப்பணை உடைந்தது

வத்தல்மலை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தின்னஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் அடிவாரத்தில் உள்ள தடுப்பணையின் கரை பகுதி உடைந்து தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

இதன்காரணமாக இந்த பகுதியில் உள்ள 7 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து சென்று உடைப்பை சீரமைத்தனர். தடுப்பணை உடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இந்த தடுப்பணையை முறையாக கட்டுமானம் செய்யாததால் தற்போது பெய்துள்ள மழைக்கு உடைந்து உள்ளது. இதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்