பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.3¼ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.

Update: 2019-09-23 23:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் நேரில் பெற்றுக் கொண்டார். இதில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 550 மனுக்கள் பெறப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் விக்னேஷ் பன்னாட்டு பள்ளி உள்ளிட்ட தனியார் மற்றும் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ காவல் படையை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நிகழ்வுகளை பார்வையிட்டனர். மேலும் அவர்கள் கலெக்டருடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் ஒருவருக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையையும், ஒரு பெண்ணுக்கு விதவை உதவித் தொகை பெறுவதற்கான ஆணையையும் கலெக்டர் வழங்கினார். மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 2 பெண்களுக்கு தலா ரூ.8 ஆயிரத்து 500 மதிப்புள்ள இலவச தையல் எந்திரங்களையும், 2 பெண்களுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 500 மதிப்புள்ள இலவச சலவைப் பெட்டிகளையும் கலெக்டர் வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 39 ஆயிரத்து 155 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணைக் கலெக்டர் வில்சன்ராஜசேகர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லாவண்யா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழா

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா’ திட்டத்துடன் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் இணைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த 5 பயனாளிகளுடன் கலெக்டர் நேர்காணல் நடத்தி அவர்களுக்கு, நினைவுப்பரிசுகளை வழங்கினார்.

பின்னர் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில நகர்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் நடத்திய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் வழிநடத்துனர்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழாவினையும் கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்