முத்துப்பேட்டையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 294 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் தப்பி ஓட்டம்

முத்துப்பேட்டை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 294 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-09-25 23:15 GMT
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடற்பகுதியில் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பொன்னுசாமி, வனச்சரக அலுவலர் ராமஜெயம், முத்துப்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, அய்யப்பசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் அலையாத்திக்காடு அருகே சென்றபோது அங்குள்ள வெட்டாறு கரையில் படகின் அருகில் நின்று கொண்டிருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

294 கிலோ கஞ்சா கடத்தல்

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த படகின் அருகே சென்று பார்த்தனர். அப்போது படகில் 7 சாக்கு மூட்டைகள் இருந்தன. அந்த சாக்கு மூட்டையில் ஒன்றை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து அனைத்து சாக்கு மூட்டை களையும் ஒவ்வொன்றாக பிரித்து பார்த்தனர். அனைத்து சாக்கு மூட்டைகளிலும் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. மொத்தம் 294 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

இலங்கைக்கு கடத்த முயற்சி

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில், இலங்கைக்கு கடத்த படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.30 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

முத்துப்பேட்டை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் 294 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்