திருவெறும்பூர் அருகே வாலிபர் கொலை வழக்கு: அண்ணன்-தம்பி உள்பட 5 பேர் கைது

திருவெறும்பூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால், முக்கிய குற்றவாளிகளை போலீசார் தப்ப விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2019-09-25 23:00 GMT
பொன்மலைப்பட்டி,

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனி பிரதானபுரத்தை சேர்ந்தவர் நீலமேகம். இவரது மகன் வீரமுத்து(வயது 35). இவர், கடந்த 22-ந் தேதி அந்த பகுதியில் தனது வளர்ப்பு நாயுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன், குபேந்திரன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த வீரமுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், தாக்கப்பட்ட 2 பேரும் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து வீரமுத்துவை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த வீரமுத்து அடுத்த நாள் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 பேர் கைது

இந்த கொலை வழக்கு தொடர்பாக ராஜா மகன் மாரியப்பன்(24), அவரது தம்பி குபேந்திரன்(19), துரைசாமி மகன் பரமசிவம்(20), துளசி மகன் ரவி (38) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 5 பேரை நவல்பட்டு போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களில் சிறுவன் மட்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான். மற்ற 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தாலும், முக்கிய குற்றவாளிகளை தப்ப வைத்து விட்டதாக வீரமுத்துவின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளதோடு மற்ற குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

மேலும் செய்திகள்