முன்னாள் ராணுவவீரர்கள் குறைதீர்வு கூட்டம்: மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர்வு கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

Update: 2019-09-26 22:45 GMT
வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் ராணுவவீரர்கள் நலச்சங்க உதவி இயக்குனர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

அதைத் தொடர்ந்து பெறப்பட்ட மனுக்கள் மீது கலெக்டர் விசாரணை மேற்கொண்டார். பின்னர் தனது உதவியாளர் மூலம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட கலெக்டர் மனுக்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் அவர், அதிகாரிகளிடம் கூறுகையில், ‘ஒரே புகார் தொடர்பாக பல்வேறு மனுக்கள் வருகிறது. முதலிலே மனு பெறும் போது அதுகுறித்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். மீண்டும் அந்த புகார் குறித்து மனுக்கள் வரக்கூடாது. அவ்வாறு வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட நடக்க முடியாத முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ஊன்றுகோல் கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சண்முகசுந்தரம், மாற்றுத்திறனாளி அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஊன்றுகோல் வழங்க நடவடிக்கை எடுத்தார். பின்னர் கூட்டத்திலேயே ஊன்றுகோல் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்